Thursday, November 13, 2008

ஐரோப்பியர் தமிழ்நாட்டுக் கோட்டைகளில் கட்டுமானபணி செய்தனர்

பொறியியலுக்கு அடிப்படை கணக்கு. 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப' என்ற குறளிலிருந்து நேற்றுவரை கிராமப்புறங்களில் விளையாடிக்கொண்டிருந்த தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் வரையிலான கணக்கு தொடர்பான திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கணக்குப் பயிற்றுவித்த முறை, இந்தியாவில் மெக்காலே கல்விமுறை அறிமுகமாவதற்கு முன்பு திண்ணைப் பள்ளிக்கூடங்களில்தான் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. ஊருக்கு ஓர் ஆசிரியர் இருப்பார். அவரது வீட்டுத் திண்ணைதான் பள்ளிக்கூடம். மாணவர்கள் மணலில் எழுதிப் பழகினர். பெரும் செல்வந்தர்கள் தம் பிள்ளைகளுக்கு ஆள்வைத்துப் பாடங்களை ஓலையில் எழுதித்தந்தனர். எனினும், ஓலைச் செலவைக் குறைப்பதற்காக எல்லாவற்றையும் மனப்பாடம் செய்துவிடப் பயிற்சியளிக்கப்பட்டது. செந்தமிழும் நாப்பழக்கம்!!! ஒரு பொருளை ஒருமுறை மனப்பாடம் செய்துவிட்டால் மட்டும் போதாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிடில் நினைவுப்பெட்டகத்தின் பின்வரிசைக்குச் சென்றுவிடும். இப்பயிற்சிக்காக உருவானவைதான் சில விளையாட்டுக்கள். பல்லாங்குழி, தாயக்கட்டம், பாண்டி, கில்லி, குலைகுலையாய் முந்திரிக்காய், தெள்ளாட்டம், கிளித்தட்டு போன்றவை பள்ளி செல்லாமலேயே கணக்குக் கற்க உதவின....

யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற ஓவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்
(பெருங்கதை : 1-58, 40-44)

பாசன முறைகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு கடந்த 3000 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி வந்துள்ளது. எகிப்து, பிற ஆப்ரிக்க நாடுகளில் நதிநீரைப் பயன்படுத்தித் தரிசு நிலத்தை வயலாக்கிய தொழில்நுட்பம் தமிழ்நாட்டவரால் கற்றுத் தரப்பட்டதென்ற கருத்தை மேனாட்டுப் பொறியாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். (டாக்டர். வா.செ.குழந்தைசாமி, 'பழந்தமிழரும் பொறியியலும்', பல்கலைப் பழந்தமிழ், பக்கம் 147)

இந்திய வணிகர்களும், தொழிலாளர்களும், உலகம் முழுவதும் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். யவனர் எனப்படும் ஐரோப்பியர், தமிழ்நாட்டுக் கோட்டைகளில் காவல்பணி செய்தனர். கட்டுமான வேலையில் பல யவனத் தச்சர் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து இருந்ததால் கருத்துப் பரிமாற்றமும் இருந்திருக்க வேண்டும். யாரிடமிருந்து எது வந்தது, எது போயிற்று என்று உத்தேசமாகக் கூறலாமேயன்றி, உறுதியாகக் கூற இயலாது. புதிய சான்று கிடைக்கும்போது பழைய செய்தி வலுவிழந்து விடும். யார் எதைப் பிடித்து நிறுத்தித் தமதாக்கிக் கொள்கிறார்களோ, அதற்கு முதன்மை உண்டு. அந்த வகையில் அந்தந்த இடத்தில் கிடைக்கும் எச்சங்கள் ஆய்விற்குப் பெருந்துணை புரிகின்றன

வெளிநாட்டுத் தொழிலாளர் பலர் கூடிப் பணிகளைச் செய்தபோதும், இதனைத் தமிழ்நட்டுத் தொழில்நுட்பம் என்றே கொள்ளல் வேண்டும். இங்குள்ள பெருந்தச்சன் (தலைமைப் பொறியாளர்) ஆணைக்கிணங்க அவர்கள் செயல்பட்டார்கள் எனக் கொள்ளல் வேண்டும். இவற்றில் வெளிநாட்டுத் தொழில்நுட்பம் ஏதும் இல்லையென உறுதிப்படக்கூற இயலாதெனினும், தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருப்பதால், இது தமிழ்நாட்டுத் தொழில்நுட்பமே எனக் கொள்ளலே பொருந்தும்.

2 comments:

ADMIN said...

ஜோரா இருக்குங்க பதிவு..!

ADMIN said...

அப்படியே இந்த பக்கம் வந்துட்டு போங்க.. பிடிச்சிருந்தா ஒரு கமெண்ட் போடுங்க.. அப்படியோ ஒரு ஓட்டும்.. இன்ட்லியில்

இணைப்பு:http://thangampalani.blogspot.com/2011/07/life-style-articlestory-of-peng-shuilin.html